ஆதிசங்கரர் வகுத்த அறுசமயக் கொள்கைகளில் வைணவமும் ஒன்று. வைணவத்தின் தலைவனாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனை சங்ககாலத் தமிழர்கள் வழிபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம். தொல்காப்பியத்தில் மாயோன் மேய காடுறை உலகமும் என்னும் தொடர் வருகிறது. திருமாலை மாயோன் என அழைத்தனர். காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லை நிலத்தின் தலைவனாகத் திருமாலைப் போற்றினார்கள்.
பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடிய பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் பெயரில், ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் தொகுத்தார். அந்த திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் ஒன்றுதான் ராமாவதாரம்.
சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான் பூவுலகில் அவதரித்த இடமான அயோத்தி நகரில், அண்மையில் ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக் கட்டளைமூலம் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூமிபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
அயோத்தி மாநகரைத் தலைநகராகக் கொண்ட கோசலை நாட்டை அரசாண்ட தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நாட்களாக மக்கட்பேறு இல்லை. தசரத சக்கரவர்த்தியின் அரசவை ஆஸ்தான குருவான வசிஷ்ட மகரிஷி, விபண்டக மகரிஷியின் புதல்வரும் காசிப மகரிஷியின் மகனுமான ரிஷ்யஸ்ருங்க மகரிஷியை அழைத்து, அவரது தலைமையில் புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினால் மக்கட்பேறு உண்டாக வாய்ப்புண்டு என கூறினார்.v அதையேற்ற தசரதர், ரிஷ்யஸ்ருங்க மகரிஷி தவம்புரிந்து வந்த இடத்திற்கு (தற்போதைய சிருங்கேரி மடம் இருக்கும் மலை) அரசப் பிரதிநிதியை அனுப்பி அவருக்கு அழைப்பு விடுத்து, தக்க மரியாதையுடன் அழைத்து வந்து சிறப்பு யாகத்தை முறையாகச் செய்யவைத்தார். யாகத்தின் பயனாக தசரத சக்கரவர்த்தியின் பட்டத்தரசிகளான கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
கௌசல்யையின் மகனாக ராமபிரான் பங்குனி மாதம், நவமி திதி, புனர்வசு நட்சத்திரத்தில், கடக லக்னமான நல்ல நேரத்தில், அயோத்தி மாநகரில் இக்ஷவாகு குலத்தில் பிறந்தார். தெய்வ அவதாரமான ராமபிரானின் திரு அவதார மகிமையை நாரத முனிவர் கூற, வால்மீகி மகரிஷி எழுதினார். அதுவே வால்மீகி இராமாயணம்.
வால்மீகி மகரிஷி, உலகில் உத்தமன் யார் என தன் சந்தேகத்தை நாரதரிடம் கேட்டபோது, அதற்கு அவர் சொன்னதே ராமகதை எனும் இராமாயணம். புனிதமான இந்த ஆதி காவியத்தைப் படித்தாலும் கேட்டாலும் நம் பாவங்கள் விலகிப்போகுமென்று-
"சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி பிரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் ப்ரோக்கர் மஹாபாதக நாசனம்'
என்று இராமாயணத்தின் பலச் சுருதி சுலோகம் தெரிவிக்கிறது. இந்த வால்மீகி இராமாயணத்தைத் தழுவி தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் எழுதியது கம்ப இராமாயணம் ஆகும்.
கம்பருக்கு முன்பே நம் சங்க இலக்கியங்களில், ராமபிரானைப் பற்றியும் அவரது அவதார சம்பவங்கள் பற்றியும் கூறப் பட்டுள்ளன.
மதுரை தமிழ்க் கூத்தனார் என்னும் சங்கப் புலவர் அகநானூறு நூல் தொகுப்பில் இதை விவரிக்கிறார். திருமணத்திற்கு முன்பு காதலனும் காதலியும் வீட்டுக்குத் தெரியாமல் வெளியே பழகுவதை களவு என்னும் சொல்லால் பழந்தமிழர்கள் குறிப்பிட்டனர். இந்த களவு நிகழ்வு ஊருக்குத் தெரிய நேர்ந்தால் இதைப்பற்றியே ஊர் முழுவதும் பேச்சாக இருக்கும். ஒருகட்டத்தில் திருமணமாகிவிட்டால், களவு பற்றிய பேச்சு தானே அடங்கி விடும்.
இதற்கு உவமை சொல்கிறார் புலவர். ராமபிரான் இலங்கைமீது படையெடுப்பது குறித்து, பாண்டிய நாட்டின் எல்லையில் கடற்கரைக்கு முன்பிருந்த ஓர் ஆலமரத்தின் கீழமர்ந்து ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்த பறவையினங்களின் ஒலியானது அவரது சிந்தனையை திசை திருப்பிய வண்ணம் இருந்தது. அவ்வொலிலைலி நிறுத்த ராமபிரான் ஒரு மந்திரத்தை ஜபித்தார். மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட பறவையினங்கள் ஒலியெழுப்பாமல் அமைதி காத்தன.
காதலர்களுக்குத் திருமணமானபிறகு, ஊரார் களவு பற்றிய பேச்சை நிறுத்தியது போல, ராமபிரானின் மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு பறவைகள் ஒலியெழுப்புவதை நிறுத்திக் கொண்டன என, அழகான உவமையுடன் கீழுள்ள பாடலைப் புலவர் பாடியுள்ளார்.
"கொடுந்திமிற் பரதவர் எனத் தொடங்கும் எழுபதாம் பாடல்...
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பௌத்தம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு
அவித்த பல்வீழ் ஆலம்போல
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே.'
இதேபோன்று ஊன்பொதி பசுங்கு டையார் என்னும் சங்ககாலப் புலவர் புறநானூற்றில் ஒரு பாடல் இயற்றியுள்ளார். தன் குடும்ப வறுமையை நீக்க சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்னும் சிற்றரசனைப் புகழ்ந்து பாடினார்.
அதைக்கேட்ட அரசன் மகிழ்ந்து தங்க ஆபரணங்களை வழங்கினான். அவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்தார் புலவர். இதுவரை தங்க ஆபரணங்களைப் பார்த்தறியாத அவரது குடும்பத்தினர், அதை எப்படி அணிவதெனத் தெரியாமல் விரலில், காதில், கழுத்தில், இடுப்பில் அணிய வேண்டியதை மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது எப்படி இருக்கிறதென் றால், ராமபிரானின் மனைவி சீதாதேவி அன்புடன் அளித்த அணிகலன்களை, குரங்குகள் என்ன செய்வதெனத் தெரியாமல் அதை வைத்து விளையாடியதைப்போல, தன் குடும்பத்தினர் அரசன் அளித்த தங்க அணிகலன்களைப் பயன்படுத்தினர் என்று ஒப்புவமையுடன், கீழுள்ள பாடலில் மிக உருக்கமாக தன் குடும்ப வறுமை நிலையையும் வெளிப்படுத்தும் வண்ணம் பாடியுள்ளார் புலவர்.
தென் பரதவர் மிடல் சாய எனத் தொடங்கும் 378-ஆம் பாடல்...
"இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல்
விரல்செரி மரபின செவித்தொடக் குநரும்...
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநுரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
மிடற்றமை மரபின அறைக்குயாக் குநரும்
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்...'
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் ஆய்ச்சியர் குரவை படலத்தின் 35-ஆம் பாடலில்...
"மூவுலகு மீரடியான் முறை நிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே'
எனப் பாடியுள்ளார். மதுரை மாநகர் சென்ற கோவலன், தன் மனைவி கண்ணகியை இடைச்சேரி பகுதியில் வசித்து வந்த மாதரி என்னும் பெண்ணிடம் தங்கியிருக்குமாறு விட்டுவிட்டுச் சென்றான். சென்ற இடத்தில் பாண்டிய மன்னனால் வீண்பழி ஏற்றுக் கொலையுண்டான். அந்த சமயத்தில் மாதரி இடைச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பெண்களை அழைத்து குரவைக்கூத்து ஆடினாள். அந்தக் கூற்றில் பாடப்பட்ட தாக இயற்றப்பட்டது மேற்கண்ட பாடல். அதில் திருமாலை (ராமன்) துதித்தாள் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று ஊர்காண் காதை, புறஞ்சேரியிருந்த காதைப் படலங்களிலும் ராமபிரானைப் பற்றிய பதிவுகள் உள்ளன.
திருமாலின் அவதாரமான ராமபிரானை வழிபடும் வழக்கம் பழந்தமிழர்களிடையே இருந்துள்ளது என்பதை இதன்மூலம் அறியலாம்.